உலக மண் வள தினம்
உலக மண் வள தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
மண் என்பது உயிரினங்கள், தாதுக்கள் மற்றும் கரிம கூறுகளால் ஆனது. இது தாவர வளர்ச்சியின் மூலம் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உணவை வழங்குகிறது. நம்மை போலவே, மண்ணுக்கும் சீரான மற்றும் மாறுபட்ட ஊட்டச்சத்துக்கள் சரியான அளவுகளில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
விவசாய முறைகளில் ஒவ்வொரு அறுவடையின் போதும் ஊட்டச்சத்துக்களை மண் இழக்கின்றன. மண்ணை நிலையான முறையில் நிர்வகிக்கவில்லை என்றால், வளம் படிப்படியாக இழக்கப்படுகிறது. மேலும் மண் ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாவரங்களை உருவாக்கும்.
மண் ஊட்டச்சத்து இழப்பு என்பது ஊட்டச்சத்தை அச்சுறுத்தும் ஒரு பெரிய மண் சிதைவு செயல்முறையாகும். உலக அளவில் உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றுக்கான உலகளாவிய அளவில் இது மிகவும் முக்கியமான பிரச்சினையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மண் பரிசோதனை
ரசாயன உரங்கள், தேவைக்கேற்ப அதிகமாக உபயோகிப்பதை தடுக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் மண் பரிசோதனை அவசியமாகும். பயிர் அறுவடைக்கு பின் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்து விடும். எனவே மண் பரிசோதனை செய்து மண் வளம் பற்றிய அறிய வேண்டியது அவசியமாகும்.
மண் வளத்தை நிலை நிறுத்துவதன் மூலம் பயிரின் உற்பத்தி மற்றும் லாபத்தை மேம்படுத்தலாம். தேவையான நேரத்தில் மண் பரிசோதனை செய்வதன் மூலம் சரிவிகித சம அளவு சத்துக்களை பயன்படுத்தி பயிரின் உற்பத்தியை அதிகரிக்கலாம். மேலும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப சரியான பயிர் தேர்வு, ரக தேர்வு மற்றும் சரியான அளவு உரம் தேர்வு ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.
உலக மண் வள தினம்
இன்று (திங்கட்கிழமை) உலக மண் வள தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆரோக்கியமான மண்ணின் முக்கியத்துவத்தின் மீது கவனம் செலுத்துவதற்கும், மண் வளங்களின் நிலையான மேலாண்மைக்கு ஆதரவளிப்பதற்கும் ஒரு வழிமுறையாக அனுசரிக்கப்படுகிறது. நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை பராமரிக்க எவ்வாறு மருத்துவ பரிசோதனைகள் அவசியமோ, அதேபோல் மண் பரிசோதனை செய்யப்படுவதன் மூலம் மண்ணில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் நிலவரம் விவசாயிக்கு தெரிய வருகிறது.
பயிர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க பயிருக்கு உரங்களை கொடுக்கிறோம். ஆனால் அதே நிலத்தின் மண்ணை பற்றி யோசிப்பதில்லை. மண் ஆரோக்கியமும் பயிர்களின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணம். அதனால் மண் வளத்தை பாதுகாப்பது விவசாயிகளின் கடமைகளில் ஒன்று. மண் வளத்தை பாதுகாத்தால் மகசூல் அள்ளலாம். மண் பரிசோதனை செய்வதன் மூலம் என்னென்ன பயிர்கள் விளைவித்தால், எவ்வளவு உரங்கள் உபயோகிக்கலாம்? என்ற தகவல் கிடைத்து விடும். கூடுதலாக ஒரு மண்ணுக்கு குறிப்பிட்ட பயிர் வகைகளை பயிர் செய்யலாம் என்ற தகவலும் கிடைக்கும்.
-பேராசிரியர் சி.ராஜா பாபு
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்