மாணவர்களுக்கு உலக ஈர நில தின சிறப்பு நிகழ்ச்சி
நெல்லை, கூந்தன்குளத்தில் மாணவர்களுக்கு உலக ஈர நில தின சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
ஈர நிலங்களை பாதுகாப்பது மூலம் பல்லுயிர் வளங்கள் மற்றும் கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 2-ந் தேதி உலக ஈர நில தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவிகளுக்கு சிறப்பு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. இதில் கயத்தாறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி ஈர நிலங்கள், ஈர நிலங்களின் பிரிவுகள், ஈர நிலங்களின் பயன்கள் மற்றும் ஈர நிலங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றி எடுத்து கூறினார். மேலும் தாமிரபரணி ஆற்றின் சிறப்புகளையும் அதனை பாதுகாப்பதன் அவசியம் பற்றியும் விளக்கினார்.
இதேபோல் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் ஈரநில தினம் குறித்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த பகுதியில் மாணவர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
நெல்லை மாவட்ட வன அலுவலரும், வன உயிரின காப்பாளருமான முருகன் ஈரநிலங்கள் குறித்து பேசினார். இதில் கூந்தன்குளம் அரசு நடுநிலைப்பள்ளி, அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, கடம்பன்குளம் மற்றும் தூய சவேரியார் பள்ளியை சேர்ந்த மாணவ- மாணவிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் ஈரநிலம் குறித்த விழிப்புணர்வு பலகையை கையில் ஏந்தி கூந்தன்குளம் கிராமத்தை சுற்றி ஊர்வலமாக வந்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் வனச்சரக அலுவலர் சரவணகுமார், உயிரியலாளர் கந்தசாமி, வனவர் அழகர்ராஜ், கூந்தன்குளம் கிராம வனக்குழு தலைவர் சந்தானகிருஷ்ணன், ஆசிரியர்கள் ராஜேசுவரி, அபர்ணா, இந்துமதி மற்றும் பாக்கியநாதன், சேவியர், ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.