உலக யோகா தினம் கொண்டாட்டம்
கரூர் மாவட்டத்தில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
உலக யோகா தினம்
சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தலின்படி கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட நீதித்துறை மற்றும் கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் உலக யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் ஏனைய நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் நீதித்துறை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நீதித்துறை மற்றும் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செய்திருந்தனர்.கடவூர் தாலுகா, தரகம்பட்டி லட்சுமி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி மாணவ- மாணவிகள் யோகாசனம் செய்தனர். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
அரசு கலைக்கல்லூரி
கரூர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி தலைமை தாங்கி, யோகாவின் முக்கியத்துவம், உடல் நலத்தை பேணுதல், மன நலன் மற்றும் உடற்பயிற்சி பற்றி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் குறித்து பயிற்றுனர் கார்த்திகேயன் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில் நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் ஜெயந்தி, தீபா, மணிவேல் மற்றும் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். முடிவில் சரவணன் நன்றி கூறினார்.
கடவூர் தாலுகா காணியாளம்பட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் தேன்மொழி தலைமை தாங்கி யோகாவின் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக்கூறினார். இதில் மாணவர்களுக்கு யோகா பயிற்சியினை உடற்கல்வி இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் விரிவுரையாளர் நந்தகுமார் ஆகியோர் வழங்கினார்கள். இதனை தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இதய தியான பயிற்சியினை ஞானப்பிரியா அளித்தார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.