கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே அகரம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள பழமைவாய்ந்த சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு சென்று வழிபட்டனர். முன்னதாக சாமிக்கு புனிதநீரால் அபிஷேகம், சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டது.
வேப்பனப்பள்ளி அருகே கடவரப்பள்ளி காரக்குப்பம் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த பச்சைமலை முருகன் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை முதலே முருகன் வள்ளி, தெய்வானை சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் கோவில் நிர்வாக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
பர்கூர்
பர்கூர் அடுத்த வரட்டனப்பள்ளி அருகே மகாராஜ கடை அங்கனமலை காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
இதேபோல் பர்கூர் அடுத்த ஜிஞ்ஜம்பட்டி கிராமம் மலைமடுவு ஆற்றங்கரையில் உள்ள பாலமுருகன் கோவிலில் 40-ம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. இதையடுத்து சந்தனகாப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப காவடி தூக்கியும், முதுகில் அலகு குத்தியும் வேண்டுதலை நிறைவேற்றினர். அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.