பழனி முருகன் கோவிலில் பரணி தீபம் ஏற்றி வழிபாடு


பழனி முருகன் கோவிலில் பரணி தீபம் ஏற்றி வழிபாடு
x

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, பழனி முருகன் கோவிலில் நேற்று பரணி தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது.

திண்டுக்கல்

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, பழனி முருகன் கோவிலில் நேற்று பரணி தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது.

கார்த்திகை தீபத்திருவிழா

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 30-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜைக்கு பின் சண்முகார்ச்சனை நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் 6.45 மணிக்கு தங்க சப்பரத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பரணி தீபம்

இந்தநிலையில் விழாவின் 6-ம் நாளான இன்று மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து யாகசாலையில் இருந்து பரணி தீபம் மூலவர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அப்போது அங்கு பரணி தீபம் ஏற்றப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் 6 மணிக்கு சண்முகார்ச்சனை, 6.30 மணிக்கு சண்முகர், வள்ளி-தெய்வானை, சின்னக்குமாரருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.

6.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் உட்பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து 7.30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெற்றது.

சொக்கப்பனை

கார்த்திகை தீபத்திருவிழாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) பழனி முருகன் கோவிலில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக மதியம் 2 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெறுகிறது.

பின்னர் 4 மணிக்கு சாயரட்சை பூஜை, மாலை 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து மலைக்கோவிலில் நான்கு திசைகளில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு மலைக்கோவில் தீப ஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுதல், சொக்கப்பனை கொளுத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதன்பிறகு திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி இன்று தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


Next Story