தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவிலில் புதிதாக வைத்த நந்தீஸ்வரர் சிலையை அனுமதி பெறும் வரை வழிபட தடை
தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவிலில் புதிதாக வைக்கப்பட்ட நந்தீஸ்வரர் சிலையை இந்துசமய அறநிலையத்துறையின் முறையான அனுமதி பெறும் வரை வழிபடக்கூடாது என்று அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவிலில் புதிதாக வைக்கப்பட்ட நந்தீஸ்வரர் சிலையை இந்துசமய அறநிலையத்துறையின் முறையான அனுமதி பெறும் வரை வழிபடக்கூடாது என்று அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
நந்தீஸ்வரர் சிலை
தேனி அல்லிநகரம் மலையடிவாரத்தில் பழமையான வீரப்ப அய்யனார் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலை, அல்லிநகரம் கிராம கமிட்டியினர் நிர்வகித்து வருகின்றனர். இந்த கோவிலில் கிராம கமிட்டி மற்றும் அல்லிநகரம் சிவனடியார் வழிபாட்டு குழு சார்பில் நந்தீஸ்வரர் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக மாமல்லபுரத்தில் இருந்து 5½ டன் எடை கொண்ட நந்தீஸ்வரர் சிலை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேனிக்கு கொண்டு வரப்பட்டது. அல்லிநகரத்தில் ஒரு தனியார் மில்லில் அந்த சிலையை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. கடந்த 17-ந் தேதி அல்லிநகரத்தில் இருந்து நந்தீஸ்வரர் சிலையை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று வீரப்ப அய்யனார் கோவில் வளாகத்தில் வைத்தனர்.
அமைதி பேச்சுவார்த்தை
இந்தநிலையில் அனுமதியின்றி இந்த சிலை வைக்கப்பட்டுள்ளதாக கூறி அந்த சிலையை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் முயற்சி செய்தனர். ஆனால் சிலையை அகற்ற பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவிலில் திரண்டனர். அவர்களிடம் பெரியகுளம் ஆர்.டி.ஓ. முத்துமாதவன் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.
இதையடுத்து அல்லிநகரம் கிராம கமிட்டியினர் மற்றும் பொதுமக்களுக்கான அமைதி பேச்சுவார்த்தை நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்துசமய அறநிலையத்துறை திண்டுக்கல் இணை ஆணையர் பாரதி, தேனி உதவி ஆணையர் கலைவாணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
வழிபட தடை
அப்போது சிலையை அகற்ற கிராம கமிட்டியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 1 மணி நேரத்துக்கும் மேல் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, "இந்துசமய அறநிலையத்துறையிடம் முறையான அனுமதி பெற்ற பிறகு நந்தீஸ்வரர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும். அனுமதி பெறும் வரை சிலையை சுற்றி தகர செட் அமைத்து பூட்டுவது. அனுமதி பெறும் வரை நந்தீஸ்வரர் சிலையை பிரதிஷ்டை செய்யவோ, வழிபடவோ கூடாது" என்று முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டதை கண்காணித்து தடுக்க தவறிய கோவில் செயல் அலுவலரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாகவும், துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பேச்சுவார்த்தையின்போது இணை ஆணையர் பாரதி தெரிவித்தார்.
இதற்கிடையே சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குருஅய்யப்பன் தலைமையில் நிர்வாகிகள் சிலர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்துவிடம் நேற்று மாலை ஒரு மனு கொடுத்தனர். அதில், "அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவிலில் குதிரை வாகன பீடம் அமைப்பதற்கு பதில் நந்தி பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்து ஆகம விதிகளுக்கு மாற்றாகவும், இந்துசமய அறநிலையத்துறைக்கு எதிராகவும் உள்ளது" என்று கூறியிருந்தனர்.