போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிக்கான எழுத்து தேர்வு


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிக்கான எழுத்து தேர்வு
x

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிக்கான எழுத்து தேர்வு நாளை மறுநாள் (சனிக்கிழமை) புதுக்கோட்டையில் 2 மையங்களில் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை

எழுத்து தேர்வு

தமிழக காவல்துறையில் 2022-ம் ஆண்டிற்கு மாநிலம் முழுவதிலுமுள்ள 39 தேர்வு மையங்களில் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த எழுத்து தேர்வு நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை மற்றும் மதியம் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,879 ஆண் விண்ணப்பதாரர்களுக்கும் 1,153 பெண் விண்ணப்பதாரர்களுக்கும் என மொத்தம் 4,032 பேருக்கு எழுத்துத் தேர்விற்கான அழைப்புக் கடிதங்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் இணையதளம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் புதுக்கோட்டை அருகே சிவபுரம் ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரி ஆகிய 2 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.

செல்போனுக்கு அனுமதி இல்லை

எழுத்துத் தேர்விற்கு வரும் விண்ணப்பதாரர்கள் அழைப்பு கடிதம், அடையாள அட்டை, பரிட்சை அட்டை, கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனா என ஆகிய பொருட்களை தவிர வேறு எதையும் தேர்வு மையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. செல்போன், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் முதலியன கண்டிப்பாக தேர்வு மையத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

விண்ணப்பதாரர்கள் தேர்வு நாளன்று பிரதான எழுத்து தேர்விற்கு காலை சரியாக 8.30 மணிக்கும், தமிழ் தகுதி தேர்விற்கு பகல் சரியாக 2 மணிக்கும் தங்களது தேர்வு மையத்தில் இருக்க வேண்டும்.

சிறப்பு பஸ்கள்

தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது அழைப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை முழுமையாக படித்து தெரிந்து வரவேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள எழுத்து தேர்விற்கு சிறப்பு மேற்பார்வையாளராக திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. சந்தோஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் நாளை மறுநாள் காலை 6 மணி முதல் இயக்கப்படும். மேற்கண்ட தகவல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story