கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு 4-ந்தேதி நடக்கிறது


கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு 4-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 1 Dec 2022 6:59 PM IST (Updated: 1 Dec 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு 4-ந்தேதி நடக்கிறது என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு 4-ந்தேதி நடக்கிறது என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

கிராம உதவியாளர் பணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணி நேரடி நியமனம் தொடர்பான விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 30-ந்தேதி நடைபெற இருந்த எழுத்து தேர்வு தேதி மாறுதல் செய்யப்பட்டு, 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட உள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 தாலுகாக்களில் மாவட்ட நிர்வாகத்தினால் அமைக்கப்பட்டுள்ள 26 தேர்வு மையங்களில் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு 4-ந்தேதி நடைபெற உள்ளது.

கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுக்கான நுழைவு சீட்டினை தாங்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது பதிவு செய்த செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி இவற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லையென்றால் தமிழக அரசின் இணையதளம் http://www, tn.gov.in, வருவாய் நிர்வாக துறையின் இணையதளம் http://cra.tn.gov.in மற்றும் திருவண்ணாமலை மாவட்ட இணையதளம் https://tiruvannamalai.nic.in மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சைக்கிள் ஓட்டும் திறன் தேர்வு

விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் எவரும் தேர்வு அறைக்குள் காலை 9.50-க்கு பின் அனுமதிக்கப்பட மாட்டார்கள். காலை 10.50 மணிக்கு முன் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

விண்ணப்பதாரர் தேர்வுக்கான அனுமதி சீட்டினை தேர்வு அறைக்கு தவறாமல் கொண்டுவர வேண்டும். இந்த தேர்வுக்கு உரிய அனுமதி சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் செல்போன், புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்கு கொண்டு வரக் கூடாது.

விண்ணப்பதாரர் கருப்பு பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எழுத்து தேர்வு 11 மணிக்கு முடிவுற்றதும், சைக்கிள் ஓட்டும் திறன் பரிசோதிக்கும் தேர்வு சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் நடைபெற உள்ளது.

இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.


Next Story