எக்ஸ்ரே டெக்னீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி எக்ஸ்ரே டெக்னீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிப்பாளையம்:
நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி எக்ஸ்ரே டெக்னீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எக்ஸ்ரே டெக்னீசியன்
சென்னை தண்டையார் நகர், வி.பி.என். கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்(வயது 58). இவர், நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இவர், நாகை நாகநாதர் சன்னதி தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இவரது மனைவி சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
தூக்கில் பிணமாக தொங்கினார்
நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டில் இருந்து விக்னேஸ்வரன் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் இது குறித்து நாகை டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது விக்னேஸ்வரன் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சீட்டு நடத்தியவர் தலைமறைவு
இதுகுறித்த புகாரின் பேரில் நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விக்னேஸ்வரன், ஒருவரிடம் மாதாந்திர சீட்டு கட்டி வந்துள்ளார். மேலும் தனக்கு தெரிந்தவர்களையும் சீட்டு போட வைத்துள்ளார்.
இந்த நிலையில் சீட்டு நடத்தி வந்தவர் பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டார். தனது பணமும், தன்னை நம்பி சீட்டு போட்டவர்களின் பணமும் பறிபோனதால் மனம் உடைந்து விக்னேஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.