சீர்காழி சட்டைநாதர் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் தொடங்கியது.
சீர்காழி:
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் தொடங்கியது.
குடமுழுக்கு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மேலும் இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருஞானசம்பந்தர் இத்தலத்தில் உமையம்மை அளித்த ஞான பாலினை அருந்தி தனது மூன்றாவது வயதில் தேவாரத்தின் முதல் பதிகமான தோருடைய செவியன் என்ற பதிகத்தை பாடினார் என்பது வரலாறு.
இத்தகைய சிறப்புமிக்க கோவில் குடமுழுக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 24-ந் தேதி காலை 8:30 மணிக்கு தொடங்கி 10 மணிக்குள் நடைபெற உள்ளது. குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று புனித நீர் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
யாகசாலை பூஜை
கோவிலின் மேற்கு கோபுர வாசல் அருகே 88 யாக குண்டங்களுடன் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாத்ரா ஹோமம், யாத்ரா தானம் மற்றும் யாகசாலை பிரவேசம் நடைபெற்றது.
தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று காலை 2-ம் கால பூஜைகள், மாலை 3-ம் கால பூஜைகளை திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தினர். இந்த யாகசாலை பூஜையில் கட்டளை தம்பிரான் சுவாமிகள்,தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி, எஸ்.எஸ்.என்.ராஜ்கமல், மாவட்ட இந்து முன்னணி தலைவர் சரண்ராஜ், திருப்பணி உபயதாரர் முரளி, கோவி நடராஜன், பந்தல் முத்து, டாக்டர் முருகேசன், அறிவழகன், வி.ஆர்.ஏ அன்பு, கோவில் நிர்வாகி செந்தில் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.