யஷ்வந்த் சின்கா இன்று சென்னை வருகிறார்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோருகிறார்
எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்கா இன்று சென்னை வருகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோருகிறார்.
சென்னை,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து ஜூலை 18-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா களம் காண்கிறார். இதனால் ஜனாதிபதி தேர்தலில் இருமுனைப் போட்டி உருவாகியுள்ளது.
பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள யஷ்வந்த் சின்காவும் பா.ஜ.க. அல்லாத பிற கட்சிகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
அதன் ஒருபகுதியாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ., எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக யஷ்வந்த் சின்கா இன்று (வியாழக்கிழமை) சென்னை வருகிறார். கேரளாவில் கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டும் யஷ்வந்த் சின்கா, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு முற்பகல் 11.45 மணிக்கு வருகிறார்.
அங்கிருந்து கிண்டி வந்து அங்குள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அவர் தங்குகிறார். மாலை 5 மணிக்கு அங்கிருந்து கார் மூலம் யஷ்வந்த் சின்கா அண்ணா அறிவாலயம் வருகிறார். அங்கு அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். அங்கேயே தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களிடமும் ஆதரவு கோருகிறார். மாலை 7 மணியளவில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் யஷ்வந்த் சின்கா, அதைத் தொடர்ந்து கிண்டி நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். மறுநாள் காலை யஷ்வந்த் சின்கா ராய்ப்பூருக்கு புறப்பட்டுச் செல்கிறார்.