தென்கால் கண்மாயில் இரை தேடும் மஞ்சள் மூக்கு நாரைகள்
திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் மஞ்சள் மூக்கு நாரை படையெடுத்து பறந்து வந்து தஞ்சமடைந்துள்ளது
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் மஞ்சள் மூக்கு நாரை படையெடுத்து பறந்து வந்து தஞ்சமடைந்துள்ளது
தென்கால் கண்மாய்
திருப்பரங்குன்றத்தில் விவசாயிகளின் முதுகெலும்பாக தென்கால் கண்மாய், நிலையூர் கண்மாய் அமைந்து உள்ளது. வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும்பட்சத்திலும், கனமழை பெய்யும் பட்சத்திலும் கண்மாய்கள் நிரம்பி பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலங்கள் விவசாயம் பெறுவதோடு குடிநீர் ஆதாரமாகவும் இந்த கண்மாய்கள் விளங்கி வருகிறது. சமீபத்தில் கனமழை பெய்ததாலும், பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது நிலங்களில் 2 போக சாகுபடி செய்தனர்.
பறவைகள் தஞ்சம்
இந்த நிலையில் தற்போது 2 கண்மாய்களிலும் தண்ணீர் அளவு கொஞ்சம், கொஞ்சமாக குறைந்துவருகிறது மேலும் இன்னும் ஒருசில வாரத்தில் கண்மாயில் முழுமையாக தண்ணீர் வற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி நிலத்தடிநீர் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு உருவாகக்கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையிலும் தட்ப வெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப வெளிநாட்டு பறவைகள் முட்டையிட்டு குஞ்சுபொறிப்பதற்காக நிலையூர் கண்மாயில் தஞ்சம் புகுந்தது.
இந்த நிலையில் மஞ்சள் மூக்கு நாரை, சங்குவளை நாரைகள் இரை தேடி கூட்டம், கூட்டமாக தென்கால் கண்மாய்க்கு படையெடுத்து பறந்து வந்தவண்ணம் உள்ளது. இதனால் பறவைகளின் வாழ்விடமாக தென்கால் கண்மாய் உருமாறி வருகிறது. பை-பாஸ் ரோட்டில் செல்லுபவர்கள் தென்கால் கண்மாயில் பறவைகள் குவிந்து இருப்பதையும், பறவைகள் மீன்களை இரையாக உட்கொள்ளுவதையும் கண்டு ரசித்து செல்கிறார்கள்.