ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த செல்லப்பிராணிகள் கண்காட்சி
ஏற்காட்டில் கோடை விழாவையொட்டி நேற்று செல்லப்பிராணிகள் கண்காட்சி நடைபெற்றது. இது சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்தது.
ஏற்காடு:
ஏற்காட்டில் கோடை விழாவையொட்டி நேற்று செல்லப்பிராணிகள் கண்காட்சி நடைபெற்றது. இது சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்தது.
கோடை விழா
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் 45-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 25-ந் தேதி தொடங்கியது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கோடை விழா நடைபெறுவதால் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக இந்த ஆண்டு கோடை விழா, மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்ணா பூங்காவில் நடந்து வரும் மலர் கண்காட்சியில் லட்சக்கணக்கான மலர்களால் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கிறார்கள்.
செல்லப்பிராணிகள் கண்காட்சி
மேலும் கோடை விழாவையொட்டி ஏற்காடு கலையரங்கில் தினமும் பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கலையரங்கத்துக்கு பின்புறம் உள்ள இடத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் செல்லப்பிராணிகள் கண்காட்சி நடைபெற்றது. இதனை கால்நடை துறை மண்டல இயக்குனர் புருஷோத்தமன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணை இயக்குனர் சாந்தி, உதவி இயக்குனர்கள் ராஜா, அய்யாசாமி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய்கள், பூனைகள், ஆடுகள், கிளிகள் போன்றவைகளை கொண்டு வந்திருந்தனர். இதில் குறிப்பாக அல்சேசன், டாபர்மேன், புல்டாக், பாக்சர், கிரேடன், டால்மேஷன், ராட்வீலர், கோம்பை, ராஜபாளையம், சிப்பிப்பாறை உள்ளிட்ட பல்வேறு வகையை சேர்ந்த 75 நாய்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் 3 கிளிகள், 5 பூனைகள், 4 ஆடுகள் இடம்பெற்றன.
முதல் பரிசு
மேலும் சேலம் மாவட்ட காவல் துறையில் உள்ள மோப்ப நாய்களும் கண்காட்சியில் கலந்து கொண்டன. தொடர்ந்து மோப்ப நாய்கள் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டின. மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்களை மோப்ப நாய்கள் சரியாக கண்டுபிடித்த போது, சுற்றுலா பயணிகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டதற்காக போலீஸ் மோப்ப நாய் நிம்மிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. மேலும் முதல் மூன்று இடங்களை பிடித்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த கண்காட்சி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருந்தது.