சென்டிரல் ரெயில்களுக்கு இடையூறு இல்லாத வகையில் நவீன இரும்பு கவசத்துடன் தயாராகும் யானைக்கவுனி ரெயில்வே மேம்பாலம்
சென்டிரலுக்கு வந்து செல்லும் ரெயில்களுக்கு இடையூறு இல்லாத வகையில், நவீன இரும்பு கவசத்துடன் யானைக்கவுனி ரெயில்வே மேம்பாலம் தயாராகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அங்கு போக்குவரத்தை தொடங்க பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்து இருந்ததுதான் இந்த யானைக்கவுனி மேம்பாலம். 18-ம் நூற்றாண்டுக்கு முந்தைய வரலாற்றை யானைக்கவுனி மேம்பாலம் சுமந்து நின்றது. ஆங்கிலேயர் காலத்தில் 1872-ம் ஆண்டு ரெயில் கடவுப்பாதை பாலமாக கட்டப்பட்டது. இதற்கு ரெயில்வே சூட்டியிருந்த பெயர் '9ஆர் மேம்பாலம்'. அதன் பின்னர் 1933-ம் ஆண்டில் இருந்து சாலை மேம்பாலமாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
காலம் கடந்து கம்பீரத்துடன் நின்ற இந்த பாலம் நாளடைவில் வலுவிழந்தது. மேலும் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தின் விரிவாக்கப் பணிக்கும் இந்த மேம்பாலம் ஒரு முட்டுக்கட்டையாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2008-2009-ம் ஆண்டில் இந்த பாலத்தை சீரமைக்க ரெயில்வேத்துறை நிதி ஒதுக்கியது. ஆனால் மறுசீரமைப்பின்போது, ரெயில் போக்குவரத்து பாதிக்கும் என்பதால், வெகு ஆண்டுகள் காத்திருந்தனர். பாலம் முற்றிலும் மோசமான நிலையை அடைந்ததை கருத்தில்கொண்டு, 2016-ம் ஆண்டு கனரக வாகனங்கள் செல்ல தடைவிதித்ததோடு, 2019-ம் ஆண்டு டிசம்பரில் இந்த மேம்பாலத்தில் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்த பாலத்தை சீரமைக்கும் பணிகளை ரெயில்வேயும், மாநகராட்சியும் சரிசமமாக பிரித்து கொண்டது. 2020-ம் ஆண்டில் மார்ச் மாதத்தில் கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி, இந்த மேம்பாலத்தை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பெரும் சவால் நிறைந்த பணியை கவனமுடனும் செய்து முடித்தனர்.
ஏற்கனவே ரெயில்வே கடவுப்பாதை மேம்பாலமாக இருந்த '9ஆர் மேம்பாலம்' (யானைக்கவுனி) 50 மீட்டர் நீளத்தை கொண்டதாக இருந்தது. ஆனால் தற்போது ரெயில் பாதையின் குறுக்கே புதிதாக அமைக்கப்பட உள்ள இந்த நவீன இரும்பு கவச மேம்பாலம் 152.16 மீட்டர் நீளத்தை கொண்டதாக அமைய உள்ளது.
ஏற்கனவே அமைந்திருந்த ரெயில்வே கடவுப்பாதை மேம்பாலம் 8 தூண்களில் தாங்கி நின்றது. இந்த புதிய இரும்பு கவச மேம்பாலமோ இடையில் எந்த தூண்களின் உதவியும் இல்லாமல், ரெயில் பாதைகளை கடந்து 2 பக்கங்களிலும் தலா ஒரு தூணில் 'இரும்பு காரிடர்களாக' ஆர்ச் வடிவத்தில் கம்பீரத் தோற்றத்துடன் நிறுத்துவதற்கு ஏதுவாக தயாராகி வருகிறது. இந்த பணிகளை ரெயில்வே நிர்வாகம் மேற்கொள்கிறது.
இந்த மேம்பாலத்தின் ஒரு புறத்தில் வால்டாக்ஸ் சாலைக்கு செல்லும் பாதையும், மறுபுறத்தில் ராஜா முத்தையா சாலைக்கு செல்லும் பாதையும் வருகிறது. அந்த சாலைகளை இணைக்கும் வகையில், சாய்வு பாலம் வால்டாக்ஸ் சாலை பகுதியை நோக்கி 165.24 மீட்டருக்கும், ராஜா முத்தையா சாலை பகுதியை நோக்கி 198.99 மீட்டருக்கும் என மொத்தம் 364.23 மீட்டர் தூரத்துக்கு சாய்வு பாலம் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி சாய்வு பாலத்தை அமைத்தவுடன், ரெயில்வே நிர்வாகம் தரப்பில் இரும்பு மேம்பாலத்தை தூக்கி நிலைநிறுத்தும் சவால் நிறைந்த பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் ரெயில்வே நிர்வாகம் தற்போது முழுமூச்சில் ஈடுபட்டு வருகிறது.
ஏற்கனவே சென்னை மாநகராட்சி சார்பில் அக்டோபர் மாதத்தில் பணிகள் நிறைவு பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு ரெயில்வே மேம்பாலம் பணிகள் நிறுவப்பட இருக்கின்றன. அந்தவகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் யானைக்கவுனி மேம்பாலத்தில் பழையபடி, போக்குவரத்தை தொடங்குவதற்கு ஏற்றவாறு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த புதிய மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, வால்டாக்ஸ் சாலை, ராஜா முத்தையா சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, வாகன ஓட்டிகளின் பயணம் எளிதாகும். மேலும் பேசன்பிரிட்ஜ் முதல் சென்டிரல் வரையிலான ரெயில் போக்குவரத்துக்கு இருந்த இடையூறு குறையும். சென்டிரல் ரெயில் நிலையத்தின் விரிவாக்கப் பணி இனி தங்கு தடையின்றி நடக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.