தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் விஷ்ணு தகவல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாள் ஆகும்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பட்டாசு கடை
நெல்லை மாவட்டத்தில் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெடி பொருட்கள் விதியின்படி, தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வியாபாரிகள் தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.
இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.
ஆவணங்கள்
விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். கடை அமைவிடத்துக்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டிடத்துக்கான 'புளு பிரிண்ட்' வரைபடம் 6 நகல் சமர்ப்பிக்க வேண்டும்.
கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருந்தால் அதற்கான ஆதாரம் அல்லது வாடகை கட்டிடமாக இருந்தால் வாடகை ஒப்பந்த பத்திரம் மற்றும் உரிமத்தை காட்டும் ஆவணம் அசல் மற்றும் 5 நகல்கள் தேவை. உரிமத்துக்கான கட்டணம் ரூ.500-ஐ அரசு கணக்கில் செலுத்தியதற்கான அசல் சலான், இருப்பிடத்துக்கான ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அல்லது ரேஷன் கார்டு மற்றும் வரி ரசீது, பாஸ்போர்ட் அளவு 2 புகைப்படங்கள் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும்.
தற்காலிக உரிமம்
ஆன்லைன் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, விசாரணை முடிந்த உடன் ஆன்லைன் மூலமாகவே தங்களது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரத்துடன் தெரிவிக்கப்படும்.
பின்னர் தற்காலிக உரிமத்துக்கான ஆணையை இ-சேவை மையம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இந்த வழிமுறை பொருந்தாது. தீபாவளி பண்டிகை காலத்தில் உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.