நாட்டுக்கோழி பண்ணை மானியத்தில் அமைக்க விண்ணப்பிக்கலாம்


நாட்டுக்கோழி பண்ணை மானியத்தில் அமைக்க விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 31 May 2023 12:15 AM IST (Updated: 31 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணை மானியத்தில் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணை மானியத்தில் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

50 சதவீதம் மானியம்

கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பதில் திறன் கொண்ட பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீத மானியம் வழங்கும் திட்டமானது மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படுத்த உள்ளது. இதன்மூலம் ஊரகப்பகுதிகளில் உள்ளவர்கள், வேலைவாய்ப்புடன் நிரந்தர கூடுதல் வருமானம் பெறமுடியும்.

தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு ஒசூர் கால்நடை பண்ணையிலிருந்து 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய கோழிகள் இலவசமாக வழங்கப்படும். நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவ தேவையான கோழிக்கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியமாக மாநில அரசால் வழங்கப்படும்.

625 சதுர அடி நிலம்

திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீத பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும். பயனாளிகளிடம் கோழிக்கொட்டகை அமைக்க மின் இணைப்புடன் கூடிய 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். மேலும் அந்த நிலம் மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி மயிலாடுதுறை மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கட்டுமானப்பணிகள், தீவனம், உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல் முறைகளும் பயனாளியால் சொந்த செலவில் மேற்கொள்ள தகுதி உடையவராக இருக்க வேண்டும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறைந்தபட்சம் 3 பயனாளிகள் முதல் 6 பயனாளிகள் வரை தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். மேற்காணும் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் தொழில் முனைவோர், பயனாளிகள் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா அடங்கல் நகல், 50 சதவீத தொகை அளிப்பதற்கான வங்கி இருப்பு விவரம் அல்லது வங்கிக்கடன் ஒப்புதல் விவரம், 3 வருடம் தொடர்ந்து பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி மற்றும் 2022-23ம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயனடையவில்லை என்பதற்கான சான்றுடன் அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி டாக்டர்களை அணுகி 10.06.2023(சனிக்கிழமை)க்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story