ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்
பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கடலூர்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 8.11.2011 அன்று வரை பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களை, அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ், "வேலை உறுதித்திட்டப் பணி, ஒருங்கிணைப்பாளர் பணிக்கு ஈடுபடுத்திக்கொள்ள ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் தகுதி இருந்தும் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக ஒரு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
எனவே 8.11.2011-க்குள் பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளர்கள் மற்றும் அவரது வாரிசுதாரர்களில் தற்போது இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் தங்களது விருப்ப கடிதம் மற்றும் அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை நாளை மறுநாளுக்குள் (புதன்கிழமை)ஏற்கனவே பணியாற்றிய அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.