காதலர் தினத்தன்று ஊட்டியில் குவிந்த இளம் ஜோடிகள்-அன்பின் வெளிப்பாடாக பரிசுப்பொருட்கள் வழங்கி மகிழ்ந்தனர்


காதலர் தினத்தன்று ஊட்டியில் குவிந்த இளம் ஜோடிகள்-அன்பின் வெளிப்பாடாக பரிசுப்பொருட்கள் வழங்கி மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காதலர் தினமான நேற்று இளம் ஜோடிகள் ஊட்டியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் குவிந்தனர் மேலும் பரிசு பொருள்கள் கொடுத்து அன்பை வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடைந்தனர்.

நீலகிரி

ஊட்டி

காதலர் தினமான நேற்று இளம் ஜோடிகள் ஊட்டியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் குவிந்தனர் மேலும் பரிசு பொருள்கள் கொடுத்து அன்பை வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடைந்தனர்.

காதலர் தினம்

உலகம் முழுவதும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா மற்றும் பரிசு பொருட்களை வழங்கி அன்பை பரிமாறி கொள்வது வழக்கம். மேலும் புதுமண தம்பதியினரும் பரிசுகளை வழங்கி தங்களது அன்பை வெளிப்படுத்துவர். குறிப்பாக குளுகுளு பிரதேசமான ஊட்டிக்கு இந்த தினத்தில் வருவதற்கு இளம் ஜோடிகள் தனி ஆர்வம் காட்டுவார்கள். குறிப்பாக வெளி மாநிலங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் வருவார்கள். அதேபோல நேற்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

இந்த தினத்தை கொண்டாட நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்தனர். இதேபோல் புதுமண தம்பதியினரும் பூங்காவில் திரண்டனர். அவர்கள் மரத்தடியில் அமர்ந்தபடி பேசி பொழுதை கழித்தனர். மேலும் ரோஜாப்பூ, சாக்லெட் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி, வாழ்த்தினை பரிமாறி கொண்டனர்.

ஒரே வண்ணத்தில் ஆடைகள்

சிலர் தாங்கள் கொண்டு வந்த உணவுகளை ஒருவருக்கொருவர் ஊட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒரு சில காதல் ஜோடியினர் ஒரே வண்ணத்தில் உடை அணிந்து வந்ததையும் காண முடிந்தது. மேலும் கைகளை கோர்த்துக்கொண்டு நாள் முழுவதும் பூங்காவை சுற்றி வந்தனர். அப்போது செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இது குறித்து காதல் ஜோடியினர் கூறுகையில், எல்லா உயிர்களிடத்தும் உள்ள உன்னதமான பண்பு காதலாகும். அதனால் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் பொது இடங்களில் ஒன்று கூடி தங்களது அன்பை வெளிப்படுத்தலாம், காதலர் தினமான இன்று (நேற்று) பூங்கா நிர்வாகம் சார்பில் கேக் வெட்டுவார்கள் அல்லது பூங்கொத்து கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை என்றனர்.

இந்த நிலையில் காதலர் தினத்தன்று அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story