காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை


காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
x

பண்ருட்டி அருகே காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் தெரிவித்தார்.

கடலூர்

புதுப்பேட்டை:

பண்ருட்டி அருகே உள்ள வீரப்பெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் மகன் சரவணன்(வயது 25). இவர், திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும், இதே கம்பெனியில் பணிபுரிந்த அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கொலையனூர் கிராமத்தை சேர்ந்த சேகர் மகள் கண்மணி(22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி, தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

திருமணம்

இந்த நிலையில் சரவணனும், கண்மணியும் கடந்த 27.1.2023 அன்று வீரப்பெருமாநல்லூர் சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் சரவணனின் பெற்றோர் வீட்டில் தங்கினர். கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த கண்மணி, விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இளம்பெண் சாவு

பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கண்மணி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கண்மணியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதறியடித்துக்கொண்டு கடலூருக்கு வந்தனர். விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கண்மணியின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். இது குறித்து புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சேகர் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் தெரிவித்திருந்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் இறந்ததால் கடலூர் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story