திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை நடக்கிறது.

செவ்வாப்பேட்டை,

திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை கிளாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 32). இவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த செந்தமிழ் (35) என்ற பெண்ணை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இருவரும் செவ்வாப்பேட்டை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சாலையில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுடன் சதீஷின் தாயார் ரெஜினாவும் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் சதீஷ் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

தற்கொலை

சதீஷின் தாயார் ரெஜினா தேவாலயத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து ரெஜினா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, செந்தமிழ் வீட்டின் படுக்கையறையில் மின்விசிறி கொக்கியில் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாப்பேட்டை போலீசார் உயிரிழந்த செந்தமிழ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை

விசாரணையில் சதீசுக்கு ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்று 2 வயதில் பெண் குழந்தை உள்ளதும், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 3 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவியை பிரிந்து சென்றதும், இதை மறைத்து சதீஷ் செந்தமிழ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனால் மனமுடைந்த செந்தமிழ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இருவருக்கும் திருமணமாகி 5 மாதங்கள் ஆவதால் திருவள்ளூர் ஆர்.டி.ஓ.விசாரணையும் நடக்கிறது.


Next Story