உயிர் பறிக்கும் 'செல்பி' மோகம் ஆர்வத்தால் ஆபத்தைத் தேடும் இளைஞர்கள்


உயிர் பறிக்கும் செல்பி மோகம் ஆர்வத்தால் ஆபத்தைத் தேடும் இளைஞர்கள்
x
தினத்தந்தி 14 Dec 2022 12:30 AM IST (Updated: 14 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

உயிருக்கு உலை வைக்கும் இதுபோன்ற ஆபத்தை விளைவிக்கும் ‘செல்பி’ மோகம், இளைஞர்களிடம் குறையுமா ? என்பது பற்றிய பல்வேறு தரப்பினரின் கருத்துகள் வருமாறு:-

தேனி

ஒரு நேரத்தில் புகைப்படங்கள் எடுக்கும் 'கேமரா'க்கள் அரிதாகப் பார்க்கப்பட்டன. புகைப்படக் கலைஞர்கள் பெரிதாகப் பார்க்கப்பட்டனர்.

இன்று தொழில்நுட்பப் புரட்சியால் செல்போன்கள் வைத்து இருப்பவர்கள் அனைவருமே புகைப் படக்காரர்கள்தான். ஐந்து வயது குழந்தைகூட ஒரு காட்சியை செல்போனில் படம் எடுத்துவிட முடிகிறது.

செல்போன்கள் மூலம் படம் எடுக்கிற மோகம் பெரியவர் முதல், சிறியவர் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை.

'செல்பி' மோகம்

அதிலும் செல்போனில் 2 பக்கமும் படம்பிடிக்கிற கேமரா வசதி, என்று வந்ததோ அன்று முதல் சுயமாக நம்மைப் படம் எடுத்துக் கொள்கிற 'செல்பி' என்கிற மோகம் ஒவ்வொருவரையும் தொற்றிக் கொண்டுவிட்டது.

திருமண விழாக்களில் மணமக்களுடன் இணைந்து 'செல்பி', பொது இடங்களில் பிரபலங்களை கண்டுவிட்டால் ஆர்வத்தில் அவர்களுடன் 'செல்பி', சுற்றுலாத் தலங்களுக்கு சென்றால் இயற்கை எழில்மிகு காட்சிகளுடன் 'செல்பி', ஏன்? உயிரிழந்த சடலங்கள் முன்பு இருந்துகூட 'செல்பி' எடுக்கிற அளவில் 'செல்பி' இன்று அதுவும் இளைய தலைமுறையினரை ஆட்டிவித்து வருகிறது.

புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அதிகம் 'லைக்ஸ்' பெற வேண்டும் என்ற ஆசையில், ஆர்வத்தில் ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுப்பதை இளைஞர்கள் விரும்புகிறார்கள்.

உயிருக்கு உலை

இவ்வாறாய் ஓடும் ரெயில் முன்பு, பாறையின் மேல் நின்று, புயல் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்ற காலங்களில் ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுக்க முயன்று பல உயிர்கள் பறிபோய் இருக்கின்றன.

இருந்தும் மக்களிடையே 'செல்பி' மோகம் குறைந்தபாடில்லை. சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 150 அடி உயரப் பாறையின் மேல் நின்று மணப்பெண் ஒருவர் 'செல்பி' எடுக்க முயன்றபோது கால் தவறி கல்குவாரி தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடினார். அவரை சினிமா கதாநாயகன் போல் மணமகன் தனது உயிரைத் துச்சமென நினைத்து கீழே குதித்து காப்பாற்றினார்.

இந்தச் சம்பவம் ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுப்பதால் ஏற்படும் விபரீதத்தை எடுத்துக் காட்டும் எச்சரிக்கையாக அமைந்தது.

தேனி மாவட்டத்தில் அருவிகள், அணைகள், மலைப்பகுதிகள் போன்ற இடங்களில் ஆபத்தான பகுதிகள் என்று மக்கள் செல்ல தடை செய்யப்பட்ட இடங்களிலும் சிலர் நுழைந்து 'செல்பி' எடுக்கின்றனர். குறிப்பாக ஹைவேவிஸ் மலைப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. அங்கு யானைகள் உலா வரும் போது அவற்றின் பக்கத்தில் சென்று படம் பிடிப்பது, வன விலங்குகளை தொந்தரவு செய்வது போன்றவையும் அடிக்கடி நடக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு ஹைவேவிஸ் தேயிலை தோட்டத்தில் யானையின் அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயன்றவரை அந்த யானை துரத்திச் சென்றதும், அந்த வாலிபர் தலைதெறிக்க ஓடிச் சென்று தப்பிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

உயிருக்கு உலை வைக்கும் இதுபோன்ற ஆபத்தை விளைவிக்கும் 'செல்பி' மோகம், இளைஞர்களிடம் குறையுமா ? என்பது பற்றிய பல்வேறு தரப்பினரின் கருத்துகள் வருமாறு:-

காவல் துறை அதிகாரி அறிவுரை

விவேகானந்தன் (மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, தேனி) :- செல்போன் என்பது முக்கியமான தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தினால், ஆபத்துகள் எதுவும் இல்லை. செல்போனில் முகப்பு கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளதே தங்களை தாங்களே புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்பதற்காக தான். ஆனால், அந்த செல்பி மோகத்தில் ஆபத்தான இடங்களில் புகைப்படம் எடுக்க முயற்சித்து விபத்துகளில் சிக்கி உயிரையும், உடல் உறுப்புகளையும் இழப்பது என்பது வேதனையானது. 'செல்பி' எடுப்பவர்களுக்கு கவனம் முழுவதும் செல்போனில் தெரியும் உருவத்தில் தான் இருக்கும். சரியான கோணத்தில் படம் பிடிக்க வேண்டும் என்ற ஆசையில், ஆபத்தான இடங்களில் நின்று படம் பிடிக்கும் போது கால்இடறி பள்ளத்தில் விழவும், ஆற்று வெள்ளத்தில் தவறி விழவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இளம் வயதினரே இதுபோன்ற 'செல்பி' மோகத்தில் அதிகம் மூழ்குகின்றனர். இளம்வயதினர் மரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்துக்கு அது பெரிய இழப்பு. வருவாய் ஈட்டும் ஒரு இளைஞன் விபத்தில் பலியானால் அவருடைய குடும்பம் பொருளாதார ரீதியிலும், உளவியல் ரீதியிலும் பேரிழப்பை சந்திக்கும். புதிதாக திருமணமான இளைஞன் 'செல்பி' மோகத்தில் உயிரை இழக்கிறார் என்றால் அது அவருடைய குடும்பத்தையும், அவர் திருமணம் செய்த பெண் மற்றும் அவருடைய குடும்பத்தையும் சேர்த்தே பாதிக்கிறது. 'செல்பி' எடுப்பதே அதை தாங்களும், பிறரும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக தான். உயிரை பணயம் வைத்து 'செல்பி' எடுக்கும் போது அதை உயிருடன் இருந்தால் தானே அதை பார்க்க முடியும். எனவே, ரெயில், பஸ் போன்ற பயணங்களில் படிக்கட்டில் நின்று பயணம் செய்வதையும், படிக்கட்டில் நின்று 'செல்பி' எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். மலைப்பாதைகள், நீர் வீழ்ச்சிகள், ஆறுகள் போன்ற இடங்களில் போலீஸ் துறை சார்பிலும், பிற அரசு துறை சார்பிலும் ஆபத்தான இடங்களில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தந்த இடங்களில் உள்ள ஆபத்துகளை உணர்ந்து விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். ஆபத்தான இடங்களில் அழகான ஒரு 'செல்பி' படத்துக்காக ஆசைப்பட்டு அற்புதமான வாழ்க்கையை இழந்து விடக்கூடாது.

புகைப்படதாரர்களுக்கு இடையூறு

கணேசன் (புகைப்பட ஸ்டுடியோ உரிமையாளர், தேனி) :- 30 ஆண்டுகளாக புகைப்படம் எடுத்து வருகிறேன். முன்பெல்லாம் பிளிம் கேமரா தான். படம் எடுத்து அதை நெகட்டிவ் தயார் செய்து, புகைப்படமாக அச்சிட்டால் தான் படம் எப்படி விழுந்துள்ளது என்பதை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். ஆனால், இப்போது செல்போனில் புகைப்படம் எடுத்தவுடன் பார்த்துக் கொள்கின்றனர். அதிலும், 'செல்பி' என்ற பெயரில் செல்போனில் காட்சியை பார்த்துக் கொண்டே எப்படி படம் வேண்டும் என்று முடிவு செய்தே எடுக்கிறார்கள். அது தொழில்நுட்ப வளர்ச்சி என்றாலும், புகைப்படதாரர்களுக்கும், ஸ்டுடியோ தொழிலும் பாதிப்பாகவே இருக்கிறது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு புகைப்படம் எடுக்கச் சென்றால் மேடையை சுற்றிலும் நின்று 'செல்பி' எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது புகைப்படதாரர்களின் பணிக்கு பாதிப்பை கொடுக்கிறது. திருமணத்தில் தாலி கட்டும் தருணம் தான் முக்கியமானது. அந்த நேரத்தில் குறுக்கே பலர் புகுந்து செல்போனில் படம் எடுக்கின்றனர். செல்போனில் எடுக்கும் புகைப்படங்களை பார்த்துவிட்டு அழித்து விடுவார்கள். ஆனால், புகைப்படதாரர்கள் எடுத்து ஆல்பம் போட்டுக் கொடுக்கும் புகைப்படங்கள் தான் பொக்கிஷமாக இருக்கும். 'செல்பி' பிரியர்கள் பிறருக்கு தொல்லை கொடுக்கக்கூடாது.

கேமராவில் தான் கவனம்

சுமன் (செல்போன் கடைக்காரர், தேனி) :- இன்றைய இளைஞர்கள், இளம்பெண்களிடம் செல்போன் வாங்கும் போது அதில் என்ன வசதிகள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதை விடவும், முன்பக்க கேமராக்கள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதில் தான் ஆர்வம் அதிகம் உள்ளது. 'செல்பி' எடுப்பதற்கு முன்பக்க கேமரா அவசியம் என்பதால் அதில் தான் அதிக கவனம் செலுத்தி வாங்குகின்றனர். பல ஆயிரம் ரூபாயில் இருந்து லட்சம் ரூபாய்க்கு மேலும் செல்போன் இருக்கிறது. அதை வாங்கியதும், அதன் டிஸ்பிளே மீது டெம்பர் கிளாஸ் ஒட்டுவது, செல்போனுக்கு உறை வாங்கி போடுவது என செல்போனை பாதுகாக்க அக்கறை செலுத்துகின்றனர். அதே நேரத்தில், அந்த செல்போனை பயன்படுத்தும் போது தங்களின் உயிர் மீது அக்கறையின்றி ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுத்து விபத்தில் சிக்கிக் கொள்வது என்பது போதிய விழிப்புணர்வு இல்லாததையே காட்டுகிறது. செல்போன் வாங்குவதில் இருக்கும் ஆர்வமும், அக்கறையும், அதை பயன்படுத்தும் போதும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story