பீர் பாட்டிலால் வியாபாரியை தாக்கிய வாலிபர் கைது
டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் வியாபாரியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஊட்டி,
ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் ஊட்டி படகு இல்ல சாலையில் சங்கு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் தனது நண்பருடன் ஊட்டி மெயின் பஜாரில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடித்து கொண்டிருந்தார். அங்கு வாலிபர் ஒருவர் தனது நண்பருடன் சத்தமாக பேசினார். இதனால் சதீஷ் அந்த வாலிபரிடம் மெதுவாக பேசுமாறு கூறியுள்ளார். அப்போது சதீசுக்கும், அந்த வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் பீர் பாட்டிலால் சதீசை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.இதில் படுகாயம் அடைந்த சதீசை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து சதீஷ் அளித்த புகாரின் பேரில் ஊட்டி மத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வணக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் டாஸ்மாக் பாரில் சதீசை தாக்கியது ஊட்டி லவ்டேல் பகுதியை சேர்ந்த குகன் (வயது 30) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஊட்டி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.