அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
மயிலாடுதுறையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்
மயிலாடுதுறை:
மணல்மேடு அருகே உத்திரங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைமாணிக்கம் (வயது 59).அரசு பஸ் டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறையில் இருந்து டவுன் பஸ்சை திருச்சிற்றம்பலம் வரை ஓட்டிச் சென்று விட்டு, மீண்டும் மயிலாடுதுறை நோக்கி வந்துள்ளார். அப்போது திருவிழந்தூர் மெயின் ரோட்டை கடந்த போது அங்கு மது போதையில் நின்று கொண்டிருந்த ஒருவர் பஸ்சை நிறுத்தியுள்ளார். பஸ் நின்றவுடன் அந்த நபர் தனது கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார். இதில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்து பஸ் டிரைவர் துரைமாணிக்கம் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் ெகாடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு டவுன் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்த திருவிழந்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த பாலு மகன் திலீப் என்கிற பாலகிருஷ்ணன் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.