கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது
காமேஸ்வரத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேளாங்கண்ணி:
கீழையூர் ஒன்றியம் காமேஸ்வரம் தண்ணீர் பந்தல் அருகே அன்பழகி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பூண்டி வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 65) என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம்போல் சம்பவத்தன்று இரவு 9:30 மணிக்கு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலையில் வந்த போதுகோவில் வாசலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.400-ஐ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் கீழையூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கோவிலில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது அதில் உண்டியலை உடைத்து பணம் திருடி சென்றவர் உருவம் பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து கோவில் உண்டியலை உடைத்து திருடியதாக மகிழி வடக்கு தெருவை சேர்ந்த முனியப்பன் மகன் வீரமணி (வயது35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.