வட்டி பணம் கேட்டு மிரட்டி செல்போனை பறித்து சென்ற வழக்கில் வாலிபர் கைது


வட்டி பணம் கேட்டு மிரட்டி செல்போனை பறித்து சென்ற வழக்கில் வாலிபர் கைது
x

காட்பாடியில் ஆட்டோ டிவைரிடம் வட்டி பணம் கேட்டு மிரட்டி செல்போனை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

காட்பாடி

காட்பாடியில் ஆட்டோ டிவைரிடம் வட்டி பணம் கேட்டு மிரட்டி செல்போனை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மிரட்டி செல்போன் பறிப்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா காங்கேயநல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 38), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி தேவகி (36). இவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக கழிஞ்சூர் பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.8 ஆயிரம் கடன் வாங்கியுள்ளனர். இந்த பணத்திற்கு வாரந்தோறும் வட்டி செலுத்த வேண்டும் என கார்த்தி கூறியுள்ளார்.

சுப்பிரமணியால் கடந்த சில வாரங்களாக பணம் செலுத்த முடியவில்லை. இதனால் அவர்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்ய கார்த்தி தன்னுடைய உறவினர் விக்னேஷூக்கு கூறியுள்ளார்.

அதன்பேரில் விக்னேஷ் சம்பவத்தன்று பழைய காட்பாடியில் இருந்த சுப்பிரமணியிடம் சென்று வட்டி பணம் கேட்டுள்ளார். தற்போது பணம் இல்லை என சுப்பிரமணி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விக்னேஷ் சுப்பிரமணி வைத்திருந்த செல்போனை பறித்துள்ளார். மேலும் பணம் கொடுத்துவிட்டு செல்போனை வாங்கி செல்லுமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

வாலிபர் கைது

இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் சுப்பிரமணி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர்.

கந்து வட்டி வசூல் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரித்திருந்தார். வேலூர் மாவட்டத்தில் கந்து வட்டி வசூல் செய்பவர்கள் குறித்து புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தெரிவித்திருந்தார்.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் கந்துவட்டி தொடர்பாக முதல் வழக்கு காட்பாடியில் பதிவு செய்யப்பட்டு வாலிபர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story