கண்டக்டரை தாக்கி பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
கண்டக்டரை தாக்கி பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சமயபுரம் நோக்கி ஒரு அரசு பஸ் புறப்பட தயாரானது. அந்த பஸ்சில் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த கதிர்வேல் (வயது 54) என்பவர் கண்டக்டராக இருந்தார். பயணிகள் ஏறியதை தொடர்ந்து, அவர் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் கண்டோன்மெண்ட் பகுதிக்கு டிக்கெட் கேட்டார். அதற்கு கண்டக்டர் அந்த பகுதிக்கு பஸ் செல்லாது என்றும், கீழே இறங்குமாறும் கூறினார். அப்போது கண்டக்டருக்கும், அந்த வாலிபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கண்டக்டரை தகாத வார்த்தையால் திட்டி கல்லால் தாக்கினார். மேலும் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல்லால் உடைத்து விட்டு தப்பி ஓடினார். இது குறித்து கதிர்வேல் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகர் சூரன்சேரி பகுதியைச் சேர்ந்த கருணாகரனை(வயது 27) கைது செய்தனர்.