சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
துபாய்க்கு தப்பினார்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் பால்ராஜ் (வயது 24). இவர் கடந்த 2020-ம் ஆண்டு 17 வயதுடைய சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு, துபாய்க்கு தப்பி சென்றுவிட்டார்.
இது குறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து தேடி வந்தனர். மேலும் போலீசார் பால்ராஜ் குறித்த விவரத்தை அனைத்து விமான நிலையங்களின் குடியுரிமை பிரிவு அதிகாரிகளுக்கும் தெரிவித்திருந்தனர்.
விமான நிலையத்தில் சிக்கினார்
இந்த நிலையில் நேற்று துபாயில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து இறங்கிய பால்ராஜ், குடியுரிமை பிரிவு அதிகாரிகளின் சோதனையில் சிக்கினார். இதையடுத்து அவர் திருச்சி விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விமான நிலைய போலீசார் பால்ராஜை பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசாரை வரவழைத்து, அவர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பால்ராஜை கைது செய்த அனைத்து மகளிர் போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.