மணப்பெண்ணுடன், ஜோடியாக இருப்பது போல் வாழ்த்து போஸ்டர் ஒட்டிய வாலிபர் கைது
குடியாத்தம் அருகே நாளை திருமணம் நடக்க இருந்த மணப்பெண்ணுடன் ஜோடியாக இருப்பது போல் வாழ்த்து போஸ்டர் ஒட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குடியாத்தம்
குடியாத்தம் அருகே நாளை திருமணம் நடக்க இருந்த மணப்பெண்ணுடன் ஜோடியாக இருப்பது போல் வாழ்த்து போஸ்டர் ஒட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காதல்
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாயில் செம்மண்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் வடிவரசன் (வயது 26), ஜே.சி.பி. டிரைவர்.
குடியாத்தத்தை அடுத்த பரதராமி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வடிவரசனுக்கு உறவினர்கள் உள்ளனர். அந்த உறவினர்களில் 25 வயது இளம்பெண் ஒருவருக்கும் வடிவரசனுக்கும் காதல் ஏற்பட்டு கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த காதல் விவகாரம் அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து பெற்றோர் கண்டித்தனர்.
இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணுக்கும் லத்தேரியை அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராணுவவீரருக்கும் திருமணம் செய்ய நிச்சயம் நடைபெற்றது.
இதையடுத்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) லத்தேரி அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுகிறது.
வாழ்த்து போஸ்டர்
இதனிடையே தான் காதலித்த உறவுக்கார பெண்ணை பழிவாங்கும் எண்ணத்தில் வடிவரசன் இளம்பெண்ணுடன் ஜோடியாக இருப்பதைப் போன்றும், நண்பர்கள் வாழ்த்து தெரிவிப்பது போன்றும் உள்ள போஸ்டரை 22-ந் தேதி இரவு பரதராமி உள்ளிட்ட கிராமங்களிலும் ராணுவ வீரர் உள்ள கிராமப்புற பகுதிகளிலும் ஒட்டி உள்ளார்.
சில இடங்களில் பேனர் கட்டியதாக கூறப்படுகிறது.
இதனை கண்ட பெண்னின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆங்காங்கே ஒட்டப்பட்டு இருந்த வாழ்த்து போஸ்டர், பேனர்களை கிழித்தனர்.
இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் நேற்று பரதராமி போலீசில் புகார் செய்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின்பேரில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி சப்-இன்ஸ்பெக்டர் அருண்காந்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
வாலிபர் கைது
விசாரணையில் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டியது வடிவரசன் என தெரிய வந்தது இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடப்பதால் வேதனை அடைந்த வடிவரசன் தனக்குத்தானே வாழ்த்து போஸ்டர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.