லாரி டியூப்களில் சாராயம் கடத்திய வாலிபர் கைது
சின்னசேலம் அருகே லாரி டியூப்களில் சாராயம் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
சின்னசேலம்
வாகன சோதனை
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் நேற்று காலை கீழ்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ, தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் கூகையூர் ஆற்றுபாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தலா 30 லிட்டர் கொள்ளளவுள்ள 5 லாரி டியூப்களில் சுமார் 150 லிட்டர் சாராயம் இருந்ததை கண்டுபிடித்தனர்.
வாலிபர் கைது
இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா நூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லதுரை மகன் மாரிமுத்து(வயது 27) என்பதும் சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா முட்டல் கிராமத்தில் இருந்து சாராயத்தை கடத்தி கடலூர் மாவட்டம் பனையந்தூர் கிராமத்துக்கு கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து மாரிமுத்துவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளுடன், 150 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.