மூதாட்டியிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது
மூதாட்டியிடம் சங்கிலி பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி ராணி (வயது 62). சம்பவத்தன்று இவர், கிழக்கு கோவிந்தாபுரம் அருகே நடந்து சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராணியின் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் சங்கிலியை பறித்துச்சென்றனர். இது குறித்து திண்டுக்கல் மேற்கு போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மூதாட்டியிடம் சங்கிலியை பறித்துச்சென்றது பெரம்பலூர் மாவட்டம் அய்யலூரை சேர்ந்த கலையரசன் (24), திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த பாரதி (25) என்பதும், திருச்சியில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து மேற்கு போலீசார் திருச்சிக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் போலீசார் வருவது குறித்து தகவலறிந்த பாரதி தலைமறைவானார். கலையரசன் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 2½ பவுன் சங்கிலி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பாரதியை போலீசார் தேடி வருகின்றனர்.