தபால் ஊழியரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
கொடைக்கானல் அருகே தபால் ஊழியரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வடமதுரை அருகே உள்ள செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மகள் ரம்யா (வயது 22). இவர், கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பெரியூர் ஊராட்சி நடுப்பட்டியில் உள்ள தபால் அலுவலகத்தில் உதவி தபால் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரை கே.சி.பட்டி பகுதியை சேர்ந்த யோகேஸ்வரன் (24) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி தபால் அலுவலகத்துக்கு யோகேஸ்வரன் சென்று ரம்யாவிடம் பேச்சு கொடுக்க முயன்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து ரம்யா வீட்டுக்்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து யோகேஸ்வரன் பேச முயன்றார். இதற்கிடையே அந்த வழியாக வந்த மற்றொரு தபால் அலுவலக ஊழியரான மன்றவயலை சேர்ந்த கணேஷ்குமார் (30) ரம்யாவை வற்புறுத்தி யோகேஸ்வரன் பேச முயல்வதை பார்த்து அவரை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த யோகேஸ்வரன் தான் வைத்திருந்த கத்தியால் கணேஷ்குமாரை சரமாரியாக குத்தினார். இதில் படுகாய மடைந்த கணேஷ்குமார் கே.சி.பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து யோகேஸ்வரனை கைது செய்தனர்.