குமரியில் 5 மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது


குமரியில் 5 மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் 5 மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே திருப்பதிசாரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். ஆனால் அதை யாரோ மர்ம நபர் திருடிச் சென்றார். இதே போல குமரி மாவட்டத்தில் பல இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இதுதொடர்பாக அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன. எனவே மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடும் மர்ம நபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த நயினார் (வயது 29) என்பவரை சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவா், ஆள் இல்லாத இடத்தில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிளை திருடி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்களை போலீசார் மீட்டனர்.


Next Story