நூதன முறையில் 5½ பவுன் சங்கிலியை திருடிய வாலிபர் கைது


நூதன முறையில் 5½ பவுன் சங்கிலியை திருடிய வாலிபர் கைது
x

பெண் பார்க்க வருவதுபோல் நடித்து நூதன முறையில் 5½ பவுன் சங்கிலியை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கணவரை பிரிந்த பெண்

கரூர் பிரதட்சனம் சாலையை சேர்ந்தவர் தனலட்சுமி என்கிற சித்ரா (வயது 35). இவர் கடந்த 1½ ஆண்டுக்கும் மேலாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சித்ராவுக்கு, வேறொரு திருமணம் செய்வதற்காக வீட்டில் ஏற்பாடு செய்து வந்து உள்ளனர். இந்நிலையில் சித்ரா இணையதளத்தின் வாயிலாக மாப்பிள்ளை தேடி உள்ளனர். அதில் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மனோஜ் குமார் (27) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இதனை அடுத்து இருவரும் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் மனோஜ்குமார் சித்ராவை பெண் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

பொருட்கள் வாங்கினர்

இதனையடுத்து மனோஜ்குமார் பழனியில் இருந்து கார் மூலம் கரூர் வந்து, சித்ராவை அவரது வீட்டில் சந்தித்தார். பின்னர் சித்ராவும், மனோஜ்குமாரும் கோவை சாலையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு பொருட்கள் வாங்குவதற்காக வந்துள்ளனர்.அப்போது மனோஜ்குமார், சித்ரா கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் சங்கிலியை நைசாக பேசி வாங்கி உள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் சித்ராவின் மணிபர்சில் அந்த சங்கிலியை போட்டு விட்டதாக மனோஜ்குமார் கூறியுள்ளார். பின்னர் 2 பேரும் பொருட்களை வாங்கி விட்டு வெளியே வந்தனர். தொடர்ந்து மனோஜ்குமார் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

கைது

இதையடுத்து சிறிது நேரத்தில் சித்ரா தனது மணிபர்சை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த 5½ பவுன் சங்கிலியை மனோஜ்குமார் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் வழக்குப்பதிந்து, சித்ராவிடம் நூதன முறையில் 5½ பவுன் சங்கிலியை திருடிய மனோஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story