2 வீடுகளில் திருடிய வாலிபர் கைது
2 வீடுகளில் திருடிய வாலிபர் கைது
தஞ்சையில் 2 வீடுகளில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 31 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
2 வீடுகளில் திருட்டு
தஞ்சை தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பூக்கார முதல் தெருவில் கடந்த 22-ந் தேதி பூட்டியிருந்த 2 வீட்டின் பூட்டை மர்மநபர்கள் உடைத்து வீட்டிற்குள் சென்றனர். பின்னர் அங்கிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த நகைகள், வெள்ளிப்பொருட்களை திருடிச் சென்றனர். ஒரு வீட்டில் 28 பவுன் நகையும், மற்றொரு வீட்டில் 3 பவுன் நகையும், வெள்ளிப்பொருட்களும் திருட்டு போனதாக தெற்கு போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடித்து நகைகளை பறிமுதல் செய்ய வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பார்வையில் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
வாலிபர் கைது
இந்தநிலையில் திருட்டு வழக்கில் தொடர்புடைய நபர் மதுரையில் தங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுரைக்கு விரைந்து சென்ற தனிப்படையினர் திருட்டு வழக்கில் தொடர்புடைய நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் லிங்கவாடி வடக்குதெருவை சேர்ந்த தவமணி மகன் வினோத் (வயது30) என்பதும், இவர் தான் தஞ்சை பூக்கார முதல் தெருவில் 2 வீடுகளில் நகைகளை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து வினோத்தை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 31 பவுன் நகைகளையும், வெள்ளிப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர். திருட்டு வழக்கில் தொடர்புடையவரை கைது செய்து, திருட்டு போன நகைகள், வெள்ளிப்பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் பாராட்டினார்.