சரக்கு ஆட்டோவில் ஆடு திருடிய வாலிபர் கைது
திருமருகல் அருகே சரக்கு ஆட்டோவில் ஆடு திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் விற்குடி ஊராட்சி வீரபோகம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 61).விவசாயி.இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார்.சம்பவத்தன்று நள்ளிரவில் ராமலிங்கம் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் வீட்டில் கட்டி வைத்திருந்த ஆடு ஒன்றை மர்ம நபர்கள் திருடி செல்வதை பக்கத்து வீட்டு பெண் ஒருவர் பார்த்துள்ளார். அதனை அவர், ராமலிங்கத்திடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் திருக்கண்ணபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் ஆடு திருடி சென்ற சரக்கு ஆட்டோவை விரட்டி சென்று கங்களாஞ்சேரியில் மடக்கி பிடித்தனர்.அப்போது ஆட்டோவில் இருந்த மர்ம நபர்கள் 3 பேர் தப்பி சென்றனர். ஆட்டோவை ஓட்டிவந்த டிரைவர் கீழ்வேளூர் ஒன்றியம் கூத்தூர் வண்ணான்குளம் தெற்கு தெருவை சேர்ந்த மோகன் மகன் விஸ்வா (22)என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஸ்வாவை கைது செய்து அவரிடம் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கூத்தூர் பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன் ராஜேஷ், ஆழியூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத் மற்றும் ஒருவரையும் தேடி வருகின்றனர்.