இரும்பு பொருட்கள் திருடிய வாலிபர் கைது
சிறுவாலை கிராமத்தில் இரும்பு பொருட்கள் திருடிய வாலிபர் கைது தப்பி ஓடிய ஆட்டோ டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு
செஞ்சி
விழுப்புரம் அருகே உள்ள சிறுவாலை கிராமத்தின் ஏரியில் ஊராட்சியின் சார்பில் கிணறு வெட்டும் பணியை மேல்காரணை கிராமத்தை சேர்ந்த குப்புசாமி என்பவர் செய்து வருகிறார். கிணறு வெட்டுவதற்கு தேவையான இரும்பு ராடு உள்ளிட்ட பொருட்களை கிணற்றின் அருகிலேயே அவர் போட்டு வைத்திருந்தார்.
சம்பவத்தன்று ஆட்டோவில் வந்து இறங்கிய மர்ம நபர் கிணறு வெட்டுவதற்காக வைத்திருந்த இரும்பு ராடு உள்ளிட்ட பொருட்களை சாக்கு பையில் போட்டு எடுத்து சென்று கொண்டிருந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் அந்த மர்ம நபரை மடக்கி பிடித்தனர். அப்போது அருகில் நின்ற ஆட்டோ டிரைவா் ஆட்டோவை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். விசாரணையில் பிடிபட்ட மர்ம நபர் பனைமலைப்பேட்டையை சேர்ந்த முத்து மகன் வசந்த்(வயது 24) என்பதும், தப்பி ஓடிய ஆட்டோ டிரைவர் அதே பகுதியை சேர்ந்த முத்து மகன் கார்த்திக்(24) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து வசந்தை கெடார் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை தேடியும் வருகின்றனர்.