ஆசிரியை வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது
அய்யம்பாளையத்தில் ஆசிரியை வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பட்டிவீரன்பட்டியை அடுத்த அய்யம்பாளையம் பஸ் நிலைய பகுதியில் வசித்து வருபவர் பரமேஸ்வரி (வயது 50). இவர் அங்குள்ள அரசுப்பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் பரமேஸ்வரியின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 36 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை திருடி சென்றனர். இதுகுறித்து பரமேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நிலக்கோட்டை நகைக்கடை வீதியில் நேற்று உருக்கிய தங்கக்கட்டியுடன் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பட்டிவீரன்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, நிலக்கோட்டையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட வாலிபர் நெல்லை மாவட்டம் மானூரை சேர்ந்த கார்த்திக்ராஜா (31) என்பது தெரியவந்தது. மேலும் இவரும், அதே பகுதியை சேர்ந்த உறவினரான பாலமுருகன் (32) என்பவரும் சேர்ந்து அய்யம்பாளையம் ஆசிரியை பரமேஸ்வரியின் வீட்டில் நகை, பணத்ைத திருடியது தெரியவந்தது. திருடிய நகையை மதுரை பகுதியில் விற்க முடியாததால், நிலக்கோட்டைக்கு கொண்டு வந்து விற்க முயன்றபோது, கார்த்திக்ராஜா போலீசாரிடம் சிக்கிக்கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்ராஜாவை கைது செய்தார். அப்போது அவரிடமிருந்து 16¾ பவுன் தங்கக்கட்டி பறிமுதல் செய்யப்பட்டது. இதில், தொடர்புடைய பாலமுருகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.