பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
சி.பி.ஐ. அதிகாரி போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் எம்.டி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் கோகிலா (வயது 34). கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் கோகிலாவிடம் பேசிய மர்மநபர் தன்னை சி.பி.ஐ. அதிகாரி என கூறி திருட்டு வழக்கில் உங்களை விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அவரை விருதுநகர் வரவழைத்து கோகிலாவிடம் இருந்து 4 பவுன் நகை, செல்போன், மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு அந்த மர்மநபர் தப்பி ஓடினார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோகிலா டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் சி.பி.ஐ. அதிகாரி போல் நடித்து நகை, மோட்டார் சைக்கிளை பறித்தது வேலூர் மாவட்டம் குப்பம் அருகே உள்ள சத்திரம்புதூரை சேர்ந்த அன்புகுமார் (27) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வேலூர் சென்று அன்புகுமாரை டவுன் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நகை, செல்போன், மோட்டார் சைக்கிளை பறித்து தப்பி சென்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அன்பு குமாரிடமிருந்து மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், அன்புகுமாரை கைது செய்தனர்.