கணவர் இறந்த வேதனையில் இருந்த பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
கணவர் இறந்த வேதனையில் இருந்த பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தக்கலை,
கணவர் இறந்த வேதனையில் இருந்த பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நகை பறிப்பு
தக்கலை அருகே உள்ள பள்ளியாடி முருங்கவிளையை சேர்ந்தவர் ஐடா (வயது 49). இவருடைய கணவர் ராஜ் சமீபத்தில் இறந்தார்.
இந்த துக்கத்தில் இருந்த போது கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி அன்று வீட்டில் தனியாக இருந்தார். அந்த சமயத்தில் மர்ம நபர் துக்கம் விசாரிப்பது போல் வீட்டுக்குள் நுழைந்தார்.
பின்னர் திடீரென ஐடாவின் முகத்தில் துணியை வைத்து அமுக்கியதும் அவர் மயக்கம் அடைந்தார். தொடர்ந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகை, காலில் கிடந்த கொலுசு ஆகியவற்றை பறித்து விட்டு தப்பி விட்டார். இதுகுறித்து ஐடா தக்கலை போலீசில் புகார் செய்தார்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் அதே அக்டோபர் மாதத்தில் அனிற்றா (32) என்பவர் பனங்காலை விளையில் உள்ள தனது தாயார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் குழந்தையின் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இதுகுறித்து அனிற்றா தக்கலை போலீசில் புகார் செய்திருந்தார்.
இந்த இரு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை 5 மணிக்கு இன்ஸ்பெக்டர் நெப்போலியன், சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் மற்றும் போலீசார் திக்கணங்கோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
வாலிபர் கைது
அப்போது சந்தேகத்திற்கிடமாக அங்கு நின்ற வாலிபரை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதை தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணையை தொடர்ந்தனர்.
அதில் குளச்சல் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (26) என்பதும் ஐடா மற்றும் அனிற்றா குழந்தையிடம் நகையை பறித்ததும் தெரிய வந்தது. பின்னர் போலீசார் வாலிபரை கைது செய்து 3 பவுன் நகையை மீட்டனர்.