மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது
மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த பல மாதங்களாக தொடர் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இந்த தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சங்கர், ஏட்டுகள் பழனி, மோசஸ் கொண்ட தனிப்படையினர் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்களில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் குடியாத்தம் அடுத்த சிங்கல்பாடி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 26) என்பதும், பகலில் கட்டிட வேலைக்கு சென்றுவிட்டு, மாலை நேரத்தில் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது. இவர் ஒரு குறிப்பிட்ட கம்பெனி மோட்டார் சைக்கிளை மட்டுமே திருடியதும் தெரியவந்தது.
அவர் கொடுத்த தகவலின்பேரில் 11 மோட்டார் சைக்கிள்களை போலீசார் மீட்டனர். மேலும் மோகன்ராஜை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.