வெள்ளி கொலுசுகளை திருடிய வாலிபர் கைது
திருக்கண்ணபுரத்தில் சாய்பாபா கோவிலின் பூட்டை உடைத்து வெள்ளி கொலுசுகளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. திருக்கண்ணபுரம் பகுதியைச் சேர்ந்த சாய்சவுரிராஜன் என்பவர் கோவில் நிர்வாகியாக உள்ளார். இவர் சம்பவத்தன்று இரவு பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கோவில் இரும்பு கிரில் கேட்டில் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது சாய்பாபா சிலையின் கால்களில் அணிந்து இருந்த 6 வெள்ளி கொலுசுகளை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது திருக்கண்ணபுரம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், சிக்கல் பனைமேடு காலனி தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் அரவிந்த் (வயது 20) எனபதும், இவர் தான் கோவில் பூட்டை உடைத்து வெள்ளி கொலுசுகளை திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 6 வெள்ளி கொலுசுக்களை பறிமுதல் செய்தனர்.