கோவில் ஆட்டை திருடிய வாலிபர் கைது


கோவில் ஆட்டை திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 Jun 2023 12:15 AM IST (Updated: 29 Jun 2023 12:03 PM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழியில் கோவில் ஆட்டை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர் விற்பனைக்காக வாட்ஸ்-அப்பில் பேரம் பேசிய தகவல் வெளியானதால் போலீசாரிடம் சிக்கினார்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழியில் கோவில் ஆட்டை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர் விற்பனைக்காக வாட்ஸ்-அப்பில் பேரம் பேசிய தகவல் வெளியானதால் போலீசாரிடம் சிக்கினார்.

ஆடு திருட்டு

ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ராமு என்ற ராமகிருஷ்ணன் (வயது 46), தனியார் நிறுவன ஊழியர். இவர் கோவிலுக்கு நேர்த்தி கடனுக்காக ஆடு ஒன்றை வளர்த்தார்.

இந்தநிலையில் கடந்த 25-ந் தேதி இந்த ஆட்டை மர்மஆசாமி திருடி சென்று விட்டார். இதுகுறித்து ராமகிருஷ்ணன் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வாலிபர் கைது

இந்தநிலையில் காணாமல் போன ஆட்டின் படத்தை போட்டு விற்பனைக்கு என ராமகிருஷ்ணனின் நெருங்கிய உறவினர் ஒருவருடைய வாட்ஸ்-அப்புக்கு குருஞ்செய்தி ஒன்று வந்தது. அதனை பார்த்த அவர் ராமகிருஷ்ணனிடம் தெரிவித்தார். உடனே அவர் போலீசில் நடந்த விவரத்தை கூறினார்.

பின்னர் நடத்திய விசாரணையில் ஆடு திருடிய ஆசாமி ஆரல்வாய்மொழி இந்திரா கூட்டுக்குடியிருப்பை சேர்ந்த ராஜ்குமார் மகன் சாம்ராஜ் (20) என்பது தெரியவந்தது. உடனே ஆரல்வாய்மொழி சப்-இன்ஸ்பெக்டர் கீதா அவரை கைது செய்தார். மேலும் கைது செய்யப்பட்ட சாம்ராஜ் மீது ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் சில வழக்குகள் உள்ளன. பின்னர் திருடப்பட்ட கோவில் ஆடும் மீட்கப்பட்டது.

வாட்ஸ்-அப்பில் பேரம்

திருடிய ஆட்டை படம் பிடித்த சாம்ராஜ் வாட்ஸ்-அப் மூலம் பரப்பியுள்ளார். பின்னர் ஒருவரிடம் அவர் ரூ.12 ஆயிரம் என பேரம் பேசி விற்பனை செய்துள்ளார்.

அதுவே சாம்ராஜ் சிக்குவதற்கு காரணமாக அமைந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story