போலி ஆவணங்கள் மூலம் ஜாமீன் பெற முயன்ற வாலிபர் கைது


போலி ஆவணங்கள் மூலம் ஜாமீன் பெற முயன்ற வாலிபர் கைது
x

உத்தமபாளையம் கோர்ட்டில் போலி ஆவணங்கள் மூலம் ஜாமீன் பெற முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய 2 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

ஜாமீன் கேட்டு மனு

திருச்சி மாவட்டம் காட்டூர் அம்மன் நகரை சேர்ந்தவர் சேதுராம். அவருடைய மகன் நந்தகுமார் (வயது 32). கடந்த 2021-ம் ஆண்டில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடி செய்த புகாரின் பேரில் இவர் மீது சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில், முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, உத்தமபாளையம் கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக்கொள்ள உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து உத்தமபாளையம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று முன்தினம் நந்தகுமார் ஆஜரானார். மேலும் அவர், தனக்கு ஜாமீன் அளிக்கக்கோரி கோர்ட்டில் தனது வக்கீல் மூலம் மனு அளித்தார். அந்த மனுவை தலைமை எழுத்தர் மணிமாலா ஆய்வு செய்தார்.

வாலிபர் கைது

அப்போது ஜாமீன்தாரராக வந்திருந்த திருச்சியை சேர்ந்த செல்வி, சுசிலா ஆகியோர் மீதும், இவர்கள் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர், தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் மீதும் சந்தேகம் எழுந்தது.

இதனையடுத்து அந்த ஆவணங்கள் உடனடியாக திருச்சி கிழக்கு தாசில்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது அந்த ஆவணங்கள் போலியானது என்று தெரியவந்தது. ஜாமீன் பெறுவதற்காக நந்தகுமார் போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் தலைமை எழுத்தர் மணிமாலா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்தனர். இதற்கிடையே ஜாமீன்தாரராக கோர்ட்டுக்கு வந்திருந்த செல்வி, சுசிலா ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story