பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் வாலிபர் கைது
மகனுடன் மொபட்டில் சென்றபோது பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
சென்னிமலை
சென்னிமலை அருகே உள்ள தோப்புப்பாளையம் எம்.பி.என் காலனியை சேர்ந்தவர் கவின்குமார் (வயது 23). இவரும், இவருடைய தாய் சாந்தியும் கடந்த 21-ந் தேதி சென்னிமலை வார சந்தைக்கு சென்று விட்டு மொபட்டில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். சென்னிமலை - ஊத்துக்குளி ரோட்டில் ஓட்டப்பாறை பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் சாந்தியின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார்.
இதில் சங்கிலியை சாந்தி கெட்டியாக பிடித்து கொண்டதால் 1½ பவுன் அளவுள்ள தங்க சங்கிலி மட்டும் மர்ம நபரிடம் சிக்கியது. உடனடியாக அந்த நபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து சென்னிமலை போலீசில் கவின் குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் திருப்பூர் அருகே பெருந்தொழுவு ரோடு அமராவதி நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளியான அஜய் (வயது 23) என்பவர் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அஜயை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நகையை விற்று கிடைத்த ரூ.10 ஆயிரம் மற்றும் வாங்கிய ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.