குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது
திண்டுக்கல் அருகே கூலித்தொழிலாளி வெட்டி கொலை செய்த வழக்கில் வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
செம்பட்டி அருகே உள்ள சீவல்சரகு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 37). கூலித்தொழிலாளி. கடந்த சில ஆண்டுகளாக இவர், திண்டுக்கல் அருகே எருமநாயக்கன்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி 13-ந்தேதி சந்தனவர்த்தினி ஆற்றுக்கு செல்லும் பாதையில் அரிவாளால் வெட்டியும், தலையில் கல்லைப்போட்டும் கருப்பையா கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கருப்பையாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (27) என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து பிரேம்குமாரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் பிரேம்குமார் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கலெக்டர் விசாகனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் பிரேம்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேம்குமாரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.