போக்சோ சட்டத்தில் கைதான வாலிபர் சிறையில் அடைப்பு


போக்சோ சட்டத்தில் கைதான வாலிபர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 25 Jan 2023 12:15 AM IST (Updated: 25 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் போக்சோ சட்டத்தில் கைதான வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் போக்சோ சட்டத்தில் கைதான வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பாலியல் பலாத்காரம்

நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்தவர் அபிஷேக் (வயது22). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த போது சக மாணவி ஒருவரை தனது நண்பர் வீட்டுக்கு வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி மாணவியின் பெற்றோர் நாகா்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் அபிஷேக் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு நடந்தது. இதற்கிடையே மாணவி புகார் கொடுத்ததை அறிந்து அபிஷேக்கை அவருடைய தந்தை வில்சன்குமார் துபாய்க்கு வேலைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. எனவே வில்சன்குமார் மீதும், அபிஷேக்கின் செயலுக்கு உடந்தையாக இருந்த நண்பர் அனீஸ் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சிறையில் அடைப்பு

இந்த நிலையில் 2½ ஆண்டுகளுக்கு பிறகு அபிஷேக் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக அபிஷேக் கூறினார். இதைத் தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை முடிந்து அபிஷேக் நேற்று முன்தினம் மாலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story