பயங்கர ஆயுதங்களுடன் வாலிபர் கைது
பயங்கர ஆயுதங்களுடன் வாலிபர் கைது
திருநீலக்குடி அருகே பயங்கர ஆயுதங்களுடன் வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணை
கும்பகோணம் அருகே உள்ள திருநீலக்குடி போலீஸ் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சீனிவாசநல்லூர் அபிராமி நகர் அருகில் நின்ற ஒரு காரில் 4 பேர் இருந்துள்ளனர். உடனடியாக அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அதில் இருந்த 4 கம்பிராடு, 3 முகமூடி, 2 கைபேசி, டைரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது காரில் இருந்த 4 பேரும் தப்பி ஓட முயன்றனர்.
கைது, கார் பறிமுதல்
இதில் ஒருவரை போலீசார் பிடித்தனர். மற்ற 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் கும்பகோணம் அண்ணல் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது27) என்பதும், கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதுகுறித்து திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்து அவர்கள் கொள்ளைக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.