18 ஆமைகளுடன் வாலிபர் கைது


18 ஆமைகளுடன் வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 Feb 2023 12:15 AM IST (Updated: 8 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் நடந்த சோதனையில், 18 ஆமைகளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நடந்த சோதனையில், 18 ஆமைகளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆமைகளை பிடிக்க தடை

கடல் மட்டுமல்லாது, நன்னீரில் வளர்க்கப்படும் ஆமைகளை பிடிக்கவும் தடை இருப்பதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அழிந்து வரக்கூடிய உயிரினங்களின் பட்டியலில் ஆமைகள் இருப்பதால், அவற்றின் எண்ணிக்கையை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

18 ஆமைகள்

இந்தநிலையில், ராமநாதபுரம் உதவி வனபாதுகாவலர் கணேசலிங்கம் தலைமையில் வனத்துறையினர் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ராமநாதபுரம் அருகே வழுதூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி சோதனையிட்டனர். அப்போது அவர்கள் வைத்திருந்த சாக்குமூடையில் 18 ஆமைகள் இருந்தன. இந்த ஆமைகளை வழுதூர் பகுதி கண்மாயில் பிடித்து, இறைச்சிக்காக கொண்டு செல்வதாக அந்த 2 பேரும் கூறி இருக்கிறார்கள்.

பறிமுதல்

எனவே ஆமைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 2 பேரை வனத்துறை அலுவலகம் கொண்டு வந்தனர். வனச்சரகர் செந்தில்குமார் நடத்திய விசாரணையில், ஆமைகளை பிடித்து வந்தவர்கள் ராமநாதபுரம் மஞ்சன மாரியம்மன் கோவில் தெரு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பாஸ் என்ற செல்வராஜ் (வயது 27) என்பதும், மற்றொருவர் 16 வயது சிறுவன் என்றும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சிறார் நீதிக்குழுமத்தில் சிறுவனை ஆஜர்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். செல்வராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


Next Story