தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு; தன்னுடன் குளித்தவர்களை காப்பாற்ற முயன்றபோது பரிதாபம்
நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
சென்னை அருகே படப்பையை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரின் மகன் வினோத் (வயது 24). இவர் போரூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் அதே நிறுவனத்தில் பணியாற்றும் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மருதுபாண்டி மகள் பாரதி (24), வேளச்சேரியை சேர்ந்த மோனிகா (22) உள்ளிட்ட 8 பேருடன் நேற்று காலை நெல்லைக்கு சுற்றுலா வந்தார்.
அவர்கள் பாளையங்கோட்டை ரகுமத்நகரில் உள்ள பாலசுந்தரி என்பவர் வீட்டில் தங்கினர். வினோத், பாரதி, மோனிகா உள்ளிட்ட 6 பேர் தாழையூத்து அருகே அருகன்குளம் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றனர்.
பாரதி, மோனிகா ஆகியோர் ஆற்றில் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வினோத் அவர்களை காப்பாற்ற சென்றார். அப்போது அங்கு குளித்து கொண்டு இருந்த பொதுமக்கள் சிலர் பாரதி, மோனிகா ஆகியோரை பத்திரமாக மீட்டனர். ஆனால் வினோத், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்ததும் தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். வினோத் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாரதி, மோனிகா ஆகியோர் சிகிச்சைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா வந்த இடத்தில் வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.