தம்பி காதை கடித்த வாலிபர் கைது
மணல்மேடு அருகே தம்பி காதை கடித்த வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மணல்மேடு;
மணல்மேடு அருகே புரசங்காடு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் பாவாடை மகன்கள் அன்பழகன் (வயது34), அருள்ராஜ் (21), அண்ணன் அன்பழகனுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். அருகில் திருமணம் ஆகாத தம்பி அருள்ராஜ் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் வேலி அமைக்க அருள்ராஜ் கம்பி வேலி சுருளை எடுத்தார். இதைக் கண்ட அன்பழகன் நான் வாங்கிய சுருளை என்னை கேட்காமல் நீ எப்படி எடுக்கலாம் என்று கேட்ட போது அண்ணன்- தம்பி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அன்பழகன், அருள்ராஜின் வலதுபக்க காதை கடித்ததாக கூறப்படுகிறது. இதில் அருள்ராஜின் காது துண்டாகி ரத்தம் சொட்டியது. இதனால் அருள்ராஜ் மயிலாடுதுறை, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் அன்பழகனை கைது செய்தனர். இந்தநிலையில் தம்பி அருள்ராஜ் தாக்கியதில் வலியால் துடித்த அன்பழகனுக்கு போலீஸ் நிலையத்தில் ஜாமீன் அளிக்கப்பட்டு அவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.